La Ligne d’urgence est opérationnelle 24h/24, 7j/7. Si vous avez besoin d’aide, appelez le 1 833 900-1010 ou utilisez la fonction Tchat sur ce site internet.

எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் – Tamoul

நீங்கள் ஆள் கடத்தல் வியாபாரத்துக்குப் (human trafficking) பலியானவர் அல்லது அதற்கு வேறு ஒருவர் பலியாகியிருக்கலாம் என நீங்கள் நினைத்தால், நாங்கள் உங்களுக்கு உதவிசெய்யமுடியும். உடனடியாகப் பதிலளிக்கக்கூடிய சட்டத்தரணிகளைக் கொண்ட நேரடி இணைப்பு 24/7/365 கிடைக்கிறது, அத்துடன் 200க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆதரவு கிடைக்கிறது. அழைப்பவர்களை, உள்ளூர் சேவை வழங்குநர்கள் மற்றும்/அல்லது கனடா முழுவதும் உள்ள சமூகங்களில் இருக்கும் அவசரகால நிலைச் சேவைகளுடன் இந்த நேரடி இணைப்பு தொடர்புபடுத்த முடியும்.

அழையுங்கள்: 1-833-900-1010

நீங்கள் எங்களுக்கு hotline@ccteht.caஇல் மின்னஞ்சலிடவும் முடியும். வலைத்தளம்/URL அல்லது இணைப்புக்களை இந்த உதவிஇணைப்பு திறக்கமாட்டாது. எனவே தயவுசெய்து, உங்களின் கரிசனையுடன் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மின்னஞ்சலில் விபரியுங்கள்.

புகார் அளிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

குறித்தவரின் விருப்பமின்றிய சாத்தியமானதொரு ஆள் கடத்தல் சம்பவம் பற்றி நீங்கள் அறிவிக்க விரும்பினால் தயவுசெய்து 1-833-900-1010ஐ அழையுங்கள் அல்லது உதவிக்குறிப்பை இணையத்தில் சமர்ப்பியுங்கள்.

கனேடிய ஆள் கடத்தல்  வியாபாரம் தொடர்பான தொலைபேசி இணைப்பு என்பது முற்றிலும் அந்தரங்கமானது. அந்தரங்கம் பற்றிய எங்களின் கொள்கையை இங்கு வாசியுங்கள்.

 

ஆள் கடத்தல் வியாபாரம் என்றால் என்ன?

ஆள் கடத்தல் வியாபாரம் என்பது ஆதாயத்திற்காக மனிதர்களைச் சுரண்டுவதாகும். கடத்தல் பல வடிவங்களில் இருக்கக்கூடும், பொதுவாக, வற்புறுத்தல், கட்டாயப்படுத்தல், ஏமாற்றல் மற்றும்/அல்லது நம்பிக்கை, அதிகாரம் அல்லது உரிமைத் துஷ்பிரயோகம் மூலம் பாலியல்ரீதியான சேவைகளை அல்லது உழைப்பை வழங்குவதற்கான கட்டாயத்துக்குப் பலியானவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனால், பலியானவர்களில் கணிசமான உடல்ரீதியான, உளவியல்ரீதியான மற்றும் உணர்ச்சிரீதியான பேரதிர்ச்சியை ஆள் கடத்தல் உருவாக்குகிறது.

பொதுவான கட்டுக்கதைகள் இருந்தாலும்கூட, தேசிய எல்லைகளைப் பலியானவர்கள் கடக்கவேண்டுமென்ற கட்டாயம் ஆள் கடத்தலில் இல்லை. ஒரு தனி நபர், ஒரு கும்பல் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகள் மூலம் இது செய்யப்படலாம். ஒரு நிறுவனம் அல்லது வேலைவழங்குநராலும் இது செய்யப்படலாம்.

 

பாலியல் தேவைகளுக்காகக் கடத்தப்பட்டவர்களில் இருக்கும் பொதுவான அறிகுறிகள்:

  • கட்டுப்படுத்தப்பட்டிருத்தல், அவர்களுக்காக வேறொருவர் பேசுதல்
  • புதிய அல்லது விலையுயர்ந்த பொருள்களை/பணத்தை நிதி நிலைமைக்குப் பொருத்தமற்ற வகையில் வைத்திருத்தல்
  • துன்புறுத்தப்படலை, போஷாக்குக் குறைபாடு மற்றும்/அல்லது போதைப்பொருள் பாவனையைக் காட்டும் அறிகுறிகள்
  • பணம், தொலைபேசி அல்லது அடையாள ஆவணங்களுக்கான அணுகல் இல்லாமலிருத்தல்
  • சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும், மழுப்பலான அல்லது ஒத்திகைசெய்யப்பட்ட பதில்கள்
  • பயந்துபோயிருத்தல், பதட்டமாயிருத்தல், தற்பாதுகாப்புடன் இருத்தல், ரகசியத்தன்மை
  • குடும்பத்தவர்கள்/ நண்பர்களுடன் தொடர்பற்றிருத்தல்
  • புதிய நண்பர் குழு, புதிய காதலில் ஆர்வம்

 

உழைப்புக்காகக் கடத்தப்பட்டவர்களில் இருக்கும் பொதுவான அறிகுறிகள்:

  • சொற்ப ஊதியத்துக்கு அல்லது ஊதியம் இல்லாமல் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படல்
  • அடையாள ஆவணங்களை வேலைவழங்குநரே வைத்திருத்தல்
  • வாக்குறுதியளிக்கப்பட்ட வேலையைவிட வித்தியாசமான வேலை செய்தல்
  • வாழ்க்கைத்தர நிலைகள் தரமற்றவையாக அல்லது ஆபத்தானவையாக இருத்தல்
  • துன்புறுத்தப்படலை, போஷாக்குக் குறைபாடு மற்றும்/அல்லது தனிப்பட்ட சுகாதாரம் மோசமாக இருப்பதைக் காட்டும் அறிகுறிகள்
  • பயந்துபோயிருத்தல், பதட்டமாயிருத்தல், தனிமைப்படுத்தப்பட்டிருத்தல்
  • நடமாட்டம் வரையறுக்கப்பட்டிருத்தல், கட்டுப்படுத்தப்பட்டிருத்தல்
  • கடனை மற்றும்/அல்லது சட்டவிரோதமான ஆட்சேர்ப்புக்கான கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கட்டாயப்படுத்தப்படல்

 

வீடுகளில் நிகழும் அடிமைத்தனத்தின் பொதுவான அறிகுறிகள்:

  • ஊதியத்தைக் கொடுக்காமல் வேலைவழங்குநரே வைத்திருத்தல் அல்லது ஊதியம் எதையும் அல்லது அதன் ஒரு பகுதியை ஒருபோதுமே வழங்காமலிருத்தல்
  • அதிகளவான வேலை நேரம், மேலதிக வேலைநேரத்துக்குக் குறைந்தளவு ஊதியம், ஓய்வுகள் அல்லது வேலையிலிருந்து விடுப்புக்கள் மறுக்கப்படல் மற்றும் நித்திரைகொள்வதற்குப் போதிய நேரம் வழங்காமை உள்ளடங்கலான தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்காத வேலைநேரங்கள்.
  • ஊதியம், மணித்தியாலங்கள் மற்றும்/அல்லது வேலையின் வகை மற்றும் அளவு என்பன வேலை ஒப்பந்தம் ஒன்றில், வேலைக்கான விளம்பரத்தில் அல்லது வேலைக்கமர்த்தலின்போது கூறப்பட்டவற்றைப் பிரதிபலிக்காமலிருத்தல்.
  • பணியாளரின் அடையாள ஆவணங்களை வேலைவழங்குநரே வைத்திருத்தல்
  • சுத்தமான மற்றும் தனிப்பட்ட வசிப்பிடங்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் மருத்துவப் பராமரிப்பு போன்ற தேவைகளுக்கான அணுகலை வேலைவழங்குநர் மறுத்தல்
  • குடும்பத்தவர்களை, நண்பர்களை, அயலவர்களை மற்றும் வங்கிகள், மருத்துவ நிலையங்கள், மதம் தொடர்பான சேவைகள் போன்ற வெளியுலகத் தொடர்புகளை அணுகாமல் வேலைவழங்குநர் பணியாளரைத் தனிமைப்படுத்துதல் அல்லது கட்டுப்படுத்தல்
  • விசா நிலை, குடிவரவு அதிகாரிகள் அல்லது காவல்துறை பற்றிப் பயமுறுத்தல்கள் உள்ளடங்கலாக வேலைவழங்குநர் பணியாளரை உணர்ச்சிபூர்வமாக அச்சுறுத்தல் மற்றும் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி நினைத்ததைச் சாதித்தல்
  • வேலைக்குச் சேர்த்தல், போக்குவரத்து போன்ற வேறு செலவுகளுக்குப் பணியாளர் பணம் செலுத்தவேண்டியிருத்தல்
  • உடல்ரீதியாக மற்றும்/அல்லது பாலியல்ரீதியாக வேலைவழங்குநர் பணியாளரைத் துன்புறுத்தல், அல்லது நெருக்கடி கொடுத்தல் அல்லது அப்படிச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்
  • பணியாளரின் குடும்பத்தினருக்கு அல்லது நண்பர்களுக்குத் தீங்கு விளைவிக்கப் போவதாக வேலைவழங்குநர் அச்சுறுத்தல்
  • ஆபத்தான வேலைச் சூழல்களில் பணியாளர் வேலைசெய்ய வேண்டியிருத்தல்